விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் ‘கிங்டம்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. முன்னணி இயக்குனர் கவுதம் தின்னனூரி, இந்தப் படத்தை இயக்கியுள்ளார், அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் மே 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்நிலையில், விஜய் தேவரகொண்டா அடுத்ததாக, இயக்குனர் ரவி கிரண் கோலா இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். ரவி கிரண் கோலா இதற்கு முன்பு, ‘ராஜா வாரு ராணி காரு’ என்கிற திரைப்படத்தை இயக்கியவர்.
விஜய் தேவரகொண்டாவின் இந்தப் புதிய படத்தை, பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இதன் மூலம், ‘தி பேமிலி ஸ்டார்’ படத்திற்குப் பிறகு, விஜய் தேவரகொண்டாவும், தில் ராஜுவும் மீண்டும் இணைகிறார்கள்.
சமீபத்தில், மகேஷ் பாபு, வெங்கடேஷ் நடித்த 2013-ல் வெளியான ‘சீதம்மா வஹிட்லோ ஸ்ரீமல்லி செட்டு’ படத்தின் ரீ-ரிலீஸ் புரமோஷன் நிகழ்ச்சியில், தயாரிப்பாளர் தில் ராஜு கலந்துகொண்டார்.அப்போது பேசிய அவர், விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்திற்கான பெயர் ‘ரவுடி ஜனார்த்தனா’ என முடிவாகியிருப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார்.முன்னதாக, விஜய் தேவரகொண்டா நடித்த ‘கிங்டம்’ படத்திற்குப் பெயர் அறிவிக்கப்படாமல் நீண்ட நாட்களாக பில்டப் கொடுத்து, பின்னர் அதிகாரப்பூர்வமாக அது ‘கிங்டம்’ என அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் தொடங்கவேயில்லாத விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கான தலைப்பை, அதன் தயாரிப்பாளர் திடீரென அறிவித்துவிட்டது, ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும், எதிர்பாராத செயலாகவும் அமைந்துள்ளது.