லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து உருவாகி வரும் படம் ‘கூலி’. இந்தப் படத்தின் டீசர், ஹோலி பண்டிகையான மார்ச் 14ஆம் தேதி வெளியாவஉள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த நாளே இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் மற்றும் ரஜினிகாந்திற்கு “ரஜினிகாந்த்” என்ற பெயரை பாலசந்தர் சூட்டிய நாள் என்பதால், இதை டீசர் வெளியீடிற்காக சிறப்பான நாளாக தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
‘கூலி’ படத்தின் அறிமுக முன்னோட்ட வீடியோ (கேஸ்ட் லுக்) வெளியான போதே ரஜினி ரசிகர்கள் பரவசமடைந்திருந்தனர். தற்போது, டீசர் வெளியாக இருப்பதால், அந்த எதிர்பார்ப்பு மேலும் பலமடங்கு அதிகரித்துள்ளது. மேலும், லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் முதல் முறையாக இணைந்திருக்கும் படம் என்பதால், படம் பற்றிய ஆர்வம் சினிமா ரசிகர்கள் மத்தியில் எகிறியிருக்கிறது.
ரஜினிகாந்த் கடைசியாக நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை,இதனால், ‘கூலி’ வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு. ரஜினியின் முந்தைய படம் ‘ஜெயிலர்’, 600 கோடி ரூபாய் வசூலைத் திரட்டியது. தற்போது ‘கூலி’ 1000 கோடி வசூலைத் தாண்டி, தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி ரூபாய் படம் ஆக வேண்டும் என்பதே ரசிகர்களின் கனவாக உள்ளது.