தமிழில் அலை, கேங் லீடர், யாவரும் நலம், மனம், 24 Movie போன்ற வித்தியாசமான கதையம்சங்கள் கொண்ட படங்களை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இயக்கி புகழ்பெற்றவர் இயக்குநர் விக்ரம் குமார். இவரது இயக்கத்தில் கடைசியாக 2022 ஆம் ஆண்டு தேங்க் யூ படம் வெளியானது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் தோல்வியடைந்தது. அதன் பின்னர் விக்ரம் குமாரின் அடுத்த படம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

கடந்த சில மாதங்களாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் நடிகர் நிதினை வைத்து விக்ரம் குமார் ஒரு புதிய படத்தை இயக்குவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்ற செய்தி பரவியது. ஆனால் அந்த முயற்சி நிறைவேறவில்லை.
இந்நிலையில், விக்ரம் குமார் சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை நேரில் சந்தித்து நிதினுக்காக எழுதப்பட்ட அதே கதையை அவரிடம் கூறியுள்ளார். அந்தக் கதை விஜய் தேவரகொண்டாவுக்கு பிடித்ததாகவும், அதில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்தப் படத்தை தயாரிக்க யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் விக்ரம் குமார் பேச்சுவார்த்தையில் இருப்பதாக தெலுங்கு திரையுலக வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.