குட் பேட் அக்லி படத்திற்குப் பிறகு, நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை, ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் ஒரு ரசிகரின் பார்வையில் இயக்கியுள்ளார் என பாராட்டியுள்ளார் அஜித். அதற்காகவே அவருக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு வழங்க உள்ளதாக உறுதியாக கூறப்படுகிறது. குட் பேட் அக்லி படத்தில் அஜித் பயன்படுத்தும் காரில் மீண்டும் ஆதிக் அஜித் கூட்டணி அமைவதற்கான குறியீடு இடம்பெற்றிருந்தது.
2026-ஆம் ஆண்டு தீபாவளி அன்று இப்படம் வெளியாகும் வகையில் உருவாக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அடுத்த சில மாதங்களில் அஜித் கார் பந்தயங்களில் பிஸியாக இருப்பதால், இந்த ஆண்டின் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிக்கப்போகிறேன் என அஜித்திடம் ஆதிக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘குட் பேட் அக்லி’ படத்தின் முடிவில், தன்னை அஜித் எந்தளவுக்கு நேசிக்கிறார் என்பதை ‘மேக்கிங் வீடியோ’ மூலம் வெளிப்படுத்தியுள்ளார் ஆதிக். அதில், அஜித்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றதும், அவரது கைகளைத் தொட்டு முத்தமிட்டதும் இடம்பெற்றுள்ளது. சரண், ‘சிறுத்தை’ சிவா, எச்.வினோத் ஆகிய இயக்குநர்களைப் போலவே, ஆதிக்கும் அஜித்துடன் தொடர்ந்து வேலை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.