ஆர்ஆர்ஆர் என்ற பிரம்மாண்ட படத்துக்குப் பிறகு, ராஜமௌலி இயக்கவுள்ள புதிய படத்தில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்துக்கான கதை விவாதம் மற்றும் முன் தயாரிப்புப் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு பிரியங்கா ஐதராபாத்துக்கு வந்திருந்தார். அவர் இந்தப் படத்துக்கான பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்த வேலைகளுக்காக வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில், இயக்குனர் ராஜமௌலி நேற்று ஒரு சிங்கத்தின் உருவத்தின் முன், கையில் பாஸ்போர்ட் பிடித்த நிலையில் உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இதற்கு மகேஷ் பாபு மற்றும் பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் கமெண்ட் செய்திருந்தனர். இதன் மூலம், பிரியங்கா இப்படத்தில் நடிக்க இருப்பது உறுதி என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.