நடிகர் ஆர்யா, எப்போதும் வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ‘நான் கடவுள்’, ‘மதராச பட்டினம்’, ‘அவன் இவன்’, ‘இரண்டாம் உலகம்’, ‘மகாமுனி’, ‘சார்பட்டா பரம்பரை’ போன்ற பல படங்களில் அவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது அவர் நடித்து முடித்திருக்கும் படம் ‘மிஸ்டர் எக்ஸ்’.

இந்தப் படத்தை, நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ‘எப்.ஐ.ஆர்’ படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கியுள்ளார். ஆக்சன் மற்றும் த்ரில்லர் கலந்த கதை கொண்ட இந்த படத்தில் சரத்குமார், மஞ்சு வாரியர், அனேகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முக்கிய கதாப்பாத்திரத்தில் கவுதம் கார்த்திக் நடித்துள்ளார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு திபு நிபுணன் தாமஸ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் இந்தப் படம் வெளியிடப்படும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது பிந்தைய தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் மே மாதம் வெளியாகும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.