மலையாளத் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி, “சூப்பர் சரண்யா” திரைப்படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டவர் மமிதா பைஜு. இவரது நடிப்பில் வெளியான “பிரேமலு” திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றியை கண்டது. இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த மமிதா பைஜுவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, தமிழ் சினிமாவில் “ரெபல்” திரைப்படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டு தனது அறிமுகத்தை நிகழ்த்தினார். தற்போது விஜய்யின் “ஜன நாயகன்” படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தென் இந்திய திரையுலகில் மிக வேகமாக முன்னேறி வரும் மமிதா பைஜு, தற்போது இன்னும் ஒரு புதிய தமிழ் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யுடன் நடித்த “ஜன நாயகன்” படப்பிடிப்பு முடிந்த பிறகு, இந்த புதிய படத்தில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புதிய படத்தை, முன்னணி இயக்குநர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கவுள்ளார். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருக்கிறது. தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் இளம் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜு இப்படத்தில் நடிக்கவிருக்கிறார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.