விஜய் தேவரகொண்டா தற்போது ‘கிங்டம்’ என்ற ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மே மாதத்தில் வெளியீடு காத்திருக்கும் இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. ‘கிங்டம்’ படத்துடன் சேர்த்து விஜய் தேவரகொண்டா, ரவி கிரண் கோலா மற்றும் ராகுல் சங்கிரித்யன் ஆகியோரது இயக்கத்தில் உருவாகும் திரைப்படங்களிலும் நடிக்கவுள்ளார்.

அதில், ரவி கிரண் கோலா இயக்கவிருக்கும் படத்திற்கு ‘ரவுடி ஜனார்தன்’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தகவல்களின் படி, இந்தப் படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க உள்ளார். தொடக்கத்தில் இந்த படத்தில் ருக்மணி வசந்த் நடிப்பார் என கூறப்பட்ட நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ், கதை விவரங்களை கேட்டவுடன் ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், தயாரிப்பாளர் தில் ராஜு இந்தப் படத்தை தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கோடை காலத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ‘மகாநதி’ திரைப்படத்தில் நடித்ததற்காக, கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.