‘கே.ஜி.எப்’ 1 & 2 திரைப்படங்கள் மூலம் இந்திய திரைத்துறையை கர்நாடகா மாநிலத்தை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் பிரசாந்த் நீல், தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி, தற்போது மிகவும் பிஸியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் நடித்துக் கொண்டிருக்கும் 31வது திரைப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளதாக, கடந்த மே 20 ஆம் தேதி, அதாவது என்.டி.ஆரின் பிறந்த நாளன்று, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பான் இந்தியா படமாக உருவாகும் இந்த திரைப்படத்தை ரூ. 350 கோடி மதிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
‘NTR-31’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படம், கடந்த ஜனவரியில் சிறப்பான பூஜையுடன் படப்பிடிப்பை துவக்கியது. இந்நிலையில், இந்தப் படம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு ஒரு அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. அதே நாளில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் ‘ஜனநாயகன்’ படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.