லைகா நிறுவனம் தயாரித்து, ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன் 2’ திரைப்படம் கடந்த வருடம் வெளியானது. இந்த படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வியடைந்தது. இந்தத் தொடரின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் போதே மூன்று பாகங்களாக எடுக்கப்படும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. ‘இந்தியன் 3’ இந்த ஆண்டில் வெளியாகும் எனவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால் ‘இந்தியன் 2’ தோல்வியைத் தொடர்ந்து ‘இந்தியன் 3’ தொடர்பான பல வதந்திகள் பரவத் தொடங்கின. இந்த படம் வரவே வராது எனவும், வந்தாலும் நேரடியாக ஓடிடி தளத்தில் மட்டுமே வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியானது. மேலும், ‘எல் 2 எம்புரான்’ படத்திலிருந்து லைகா நிறுவனம் விலகி, அதன் பங்குகளை கோகுலம் நிறுவனம் வாங்கியதாக கூறப்பட்டதால், லைகா நிறுவனம் முடிவுக்கு வரக்கூடுமென கோலிவுட்டில் பேச்சுகள் வெளியானது.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியாக தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘இந்தியன் 3’ திரைப்படத்தை, ‘தக் லைப்’ திரைப்படத்திற்கு பிறகு வெளியிட திட்டமிட்டுள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்து முடித்துள்ள ‘லாக்டவுன்’ படமும் விரைவில் வெளியிடப்பட உள்ளது. மேலும், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் இரண்டு பெரிய புதிய படங்களை தயாரிக்கும் திட்டத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. எனவே, லைகா நிறுவனம் மூடப்படும் என வெளியான செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்றும் உறுதியாக கூறப்படுகிறது