தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களாக இருப்பவர்கள் குஷ்பூவும் இவரது கணவரும் பிரபல இயக்குநருமான சுந்தர்.சி. இவர்களுடைய மகனான அவந்திகா லண்டனில் நடிப்பு கல்வியை முறையாக பயின்று வந்தார், தற்போது சினிமாவில் நடிக்கத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். வெறும் நாயகியாக மட்டுமின்றி, திறமையான ஒரு நடிகையாக திரையுலகில் அடையாளம் காணப்பட வேண்டும் என்பது அவரது கனவாகும். சினிமாவில் பிரபலங்களின் வாரிசாக இருந்தாலும், தான் எதற்காக வாய்ப்பு பெறவில்லை என்பதைப் பற்றி, ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தன் மனம் திறந்துள்ளார்.

அந்த பேட்டியில் அவந்திகா கூறியதாவது: “எனக்கு எந்த மொழியிலும் நடிக்கத் தயார். சிறந்த கதைகளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அவை நிச்சயமாக கிடைக்கும் என்பதிலும் நம்பிக்கை உள்ளது. நடிகையாக இருக்க வேண்டும் என்றொரு மாதிரியான கட்டுப்பாடு இங்கிருக்கும். ஆனால், அந்த வரம்புக்குள் நான் இல்லை என்பதும் எனக்குத் தெரியும். என் உயரம் தான் எனக்கு முதன்மை தடையாக உள்ளது. அதிக உயரம் காரணமாக, எனது முதல் வாய்ப்புக்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நான் என் டீனேஜ் காலத்தில் அதிக உடல் எடையுடன் இருந்தேன். மேலும், கண்ணாடி அணிந்து வந்தேன். ஆனால், இப்போது அந்த அனைத்திலிருந்தும் மெல்ல மெல்ல விலகி, என்னைத் தக்கவகையில் மாற்றிக் கொண்டிருக்கிறேன். என் பெற்றோர் இருவரும் சினிமா நட்சத்திரங்கள் என்பதால், அவர்களின் உதவியுடன் வாய்ப்பு பெற முடியும் என்பது உண்மைதான். ஆனால், அந்த வழியைத் தேர்ந்தெடுக்க நான் விரும்பவில்லை. எனது முயற்சியில்தான் என் பெற்றோரும் மகிழ்ச்சியடைகின்றனர்” என அவர் கூறியுள்ளார்.