‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் அஜித் குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் ராகுல் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில், டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளையில், அஜித்தின் 65வது படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்ற விவரம் குறித்து செய்திகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. அதன்படி, ‘எப்.ஐ.ஆர்’ படத்தை இயக்கிய மனு ஆனந்த் தான் அஜித் 65வது படத்திற்காக கதை கூறியுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில், ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித் நடிக்கும் காலத்தில் மனு ஆனந்த் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தார். அப்போது உருவான நட்பு காரணமாக இப்போது இந்த கூட்டணி உருவாகவிருக்கிறது என்று கூறப்படுகிறது.
தற்போது மனு ஆனந்த், ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

