தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா. தனது நீண்டகால திரைப்பட பயணத்தில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு, இயக்குநர் போயபதி சீனு இயக்கிய “அகண்டா” திரைப்படத்தில் நடித்து, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். அந்த ஆண்டு வெளியான தெலுங்கு படங்களில் அதிக வசூல் செய்த படங்களில் “அகண்டா” ஒன்றாக இருந்தது.

இந்த படத்தில் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, இப்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

“அகண்டா 2 தாண்டவம்” என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்த படம் வரவிருக்கும் செப்டம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது. மேலும், இந்தப் படத்தில் வில்லனாக நடிகர் ஆதி நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இதற்கிடையில், பாலிவுட் பிரபல நடிகை வித்யா பாலன், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஒரு அரசியல் தலைவராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.