இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், விருமன், மாவீரன், நேசிப்பாயா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், ஷங்கரின் மகனான அர்ஜித், தற்போது ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். இதனால், அவர் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுபோல், இயக்குநராகவே களமிறங்குவார் என கூறப்பட்டது. ஆனால், தற்போது அவர் நடிகராக அறிமுகமாக உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை பிரபுதேவா இயக்குவதாக கூறப்படுகிறது. சினிமாவில் நடன இயக்குநராக தனது பயணத்தை தொடங்கிய பிரபுதேவா, பின்னர் பாடல்களுக்கு நடனமாடி பிரபலமடைந்தார். இதைத்தொடர்ந்து, இயக்குநர் ஷங்கர், தனது முதல் படமான ஜென்டில்மேன் திரைப்படத்தில், ஒரு பாடலுக்கு பிரபுதேவாவை நடனமாட வைத்தார். அதன் பிறகு, காதலன் படத்தில் அவரை நாயகனாகவும் அறிமுகம் செய்தார்.
அதேபோல், தற்போது ஷங்கரின் மகன் அர்ஜித்தை பிரபுதேவா, தனது புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்யவுள்ளார். இது, திரைப்பட ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.