தமிழில் ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய தமிழ் திரைப்படங்களை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.இந்த படங்கள் எந்தவொன்றும் வணிகரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை. தற்போது, அவர் தனுஷை முன்னணி கதாபாத்திரமாக வைத்து, இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கத் திட்டமிட்டிருந்தார். இப்படத்தின் தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது. ஆனால், தற்போது இந்தப் படம் காலதாமதமாகும் என்று தொடர்ந்து தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில், முதன்முறையாக ஒரு ஹிந்தி திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை அருண் மாதேஸ்வரன் பெற்றுள்ளார். இந்தப் படத்தை சரிதா அஸ்வின் வர்தே என்பவர் ரேவ் ரிவர் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். தற்போது, இப்படத்திற்கான திரைக்கதை மீதான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது.
இன்றைய தலைமுறையில் அட்லி, ராஜ்குமார் பெரியசாமி, அருண் மாதேஸ்வரன், லோகேஷ் கனகராஜ் ஆகிய முன்னணி இயக்குநர்கள் ஹிந்தி சினிமா பக்கம் திரும்பியுள்ளனர். இவர்களில் அட்லி ஏற்கனவே ஷாரூக்கானுடன் இணைந்து ஜவான் என்ற பெரிய வெற்றி படத்தை வழங்கியுள்ளார்.