பாலிவுட் இயக்குநர் நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘கில்’. இந்தப் படத்தை கரண் ஜோஹர் தயாரித்துள்ளார். இதில் லக்ஷயா, ராகவ் ஜுயல், தன்யா, ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்ஷன் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் உருவான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் தென்னிந்திய மொழி ரீமேக் உரிமையை இயக்குநர் ரமேஷ் வர்மா பெற்றுள்ளார். ‘கில்’ படத்தைத் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார்.
தற்போது ‘கில்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். அந்தச் சந்திப்பு வெற்றிகரமாக முடிந்து, துருவ் விக்ரம் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை இயக்குவது மட்டுமின்றி தயாரிக்கவும் ரமேஷ் வர்மா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.