தமிழ் திரைப்பட உலகில் 1960, 1970களில் நடிகர், காமெடியன், இயக்குநர் மற்றும் பாடகராக பல்வேறு பரிமாணங்களில் திகழ்ந்தவர் சந்திரபாபு. அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி உச்ச நட்சத்திரங்களாக இருந்த அளவிற்கு, அவர்களுக்கு நிகராகத் திகழ்ந்த நடிகர் சந்திரபாபு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவர் கிட்டத்தட்ட 76 படங்களில் நடித்துள்ளார்.
சந்திரபாபு தனது நடிப்பு வாழ்க்கையின் உச்ச நிலைக்குள் இருந்தபோது, க்ரீன் ரோட்டில் 20 ஏக்கர் பரப்பளவில் ஒரு வீடு கட்டத் திட்டமிட்டார். அந்த வீட்டை அவர் நேரடியாக முதல் மாடிக்கு கார் பார்க்கிங் வசதியுடன் உருவாக்கினார், இது அப்போது மிகவும் புதுமையான எண்ணமாக இருந்தது. பின்னர், எம்.ஜி.ஆரை முன்னணி கதாபாத்திரத்தில் வைத்து ‘மாடி வீட்டு ஏழை’ என்ற படத்தை இயக்க அவர் திட்டமிட்டார். ஆனால், அந்த படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் சந்திரபாபு பண ரீதியாகவும் மனதளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டு, 1974ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
இப்போது, சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் நடிகர் தனுஷ் இறங்கியுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திரைப்படத்தில் சந்திரபாபுவாக தனுஷ் நடிக்கவுள்ளார். இதற்காக சந்திரபாபுவின் குடும்பத்தாரிடம் அவர் முறையான அனுமதி பெற்றுள்ளார் என்று நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தனுஷ் ஏற்கனவே இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில், இளையராஜாவாக நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.