ராஜா ராணி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படத்தில் ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். படம் வெளியாகியதும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதன் பின்னர், விஜய் நடித்த ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய மூன்று பிளாக்பஸ்டர் படங்களையும் இயக்கினார். இந்த படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றதோடு, அவரது திரைக்கதைக்கும் ரசிகர்கள் கைதட்டினர்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/01/1000152438-1024x536.png)
அடுத்ததாக, 2023-ம் ஆண்டு, ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தை இயக்கினார். இந்த படம் இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த படங்களில் 5-வது இடத்தை பிடித்தது. குறிப்பாக, 1,200 கோடி ரூபாய் வரை வசூல் செய்த இந்த படம், இந்திய திரையுலகில் மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/01/1000152442-1024x582.png)
தற்போது, அட்லீயின் 6-வது திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது என கூறப்படும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. மேலும், இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக, இதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பிரம்மாண்ட பட்ஜெட்டில் சரித்திர கதையில் உருவாகும் என கூறப்படுகிறது.
அதேபோல், இந்த படத்தில் கதாநாயகியாக தென்னிந்திய முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சல்மான் கானுடன் ‘சிக்கந்தர்’ படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா, தற்போது மீண்டும் அவருடன் ஜோடி சேரவுள்ளதாக இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.