தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். ‘புஷ்பா: தி ரைஸ்’ மற்றும் ‘புஷ்பா: தி ரூல்’ திரைப்படங்களின் மூலம் அவர் சர்வதேச அளவில் பேரப்புகழைப் பெற்றார். குறிப்பாக, ‘புஷ்பா: தி ரைஸ்’ திரைப்படத்திற்காக அவர் தேசிய விருதையும் வென்றார். மேலும், இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா: தி ரூல்’ பாக்ஸ் ஆபிஸில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து அபார வெற்றி பெற்றது.

தற்போது, ரசிகர்கள் அனைவரின் கவனமும் அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தின் மீது உள்ளது. அதன்படி, அல்லு அர்ஜுன் தனது அடுத்த திரைப்படத்தில் பிரபல இயக்குநர் அட்லீயுடன் கூட்டணியாக பணியாற்ற இருக்கிறார். மிகப்பெரிய அளவில் தயாராகும் இந்த படத்தில், அட்லீ இயக்கிய ‘மெர்சல்’, ‘பிகில்’, ‘ஜவான்’ போன்ற படங்களை போலவே அல்லு அர்ஜுனும் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பிரம்மாண்டமான படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது, மேலும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லு அர்ஜுனின் பிறந்த நாளான ஏப்ரல் 8ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், இப்படத்தில் நடிக்க இருக்கும் கதாநாயகி தொடர்பான தகவல்களும் வெளியாகி இருக்கின்றன. தற்போதைய தகவல்களின் படி, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார், மேலும் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகிற செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.