தனுஷ் தற்போது ஹிந்தியில் ‘தேரே இஸ்க் மெயின்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு, ‘போர் தொழில்’ படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு புதிய தமிழ்ப்படத்தில் அவர் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ‘பிரேமலு’ படத்தின் மூலம் பிரபலமான மமிதா பைஜூ ஒப்பந்தமாகியிருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி தனது அடுத்த படத்தில் சூர்யாவை இயக்கவுள்ளார். இந்தப் படம், இந்தியாவின் முதல் இன்ஜின் எப்படி உருவானது என்பதைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகவுள்ளது. இப்படத்திற்கு ‘760 CC’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்திலும் கதாநாயகியாக மமிதா பைஜூ ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மமிதா, இதற்கு முன்பு ‘வணங்கான்’ படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார். ஆனால் பின்னர் சூர்யா மற்றும் மமிதா இருவரும் அந்தப் படத்திலிருந்து விலகினர். மலையாளத்தில் வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகையான மமிதா, தற்போது தமிழ் திரையுலகிலும் தொடர்ந்து புதிய பட வாய்ப்புகளை பெற்றுக்கொண்டு இருக்கிறார். தமிழில் ‘ரெபல்’ படத்தில் நடித்த மமிதா, தற்போது ‘ஜனநாயகன்’ மற்றும் ‘இரண்டு வானம்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.