அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்த ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. இதில் கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி, வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது.

இப்போது, இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. ஆனால், அந்தப் படத்தில் ‘சுமதி’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த தீபிகா படுகோன், இரண்டாம் பாகத்திலிருந்து விலகுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
அவருக்கும் தயாரிப்பு தரப்பிற்கும் இடையே சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது அவரது கதாபாத்திரத்தில் யார் நடிக்கவிருக்கிறார்கள் என்பதைக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும், அந்த கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை ஆலியா பட்-டை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.