நடிகர் பிரசாந்தின் நடிப்பில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கடந்த ஆண்டு வெளியான‘அந்தகன்’ மற்றும் விஜய்யின் ‘தி கோட்’ என்ற இரு திரைப்படங்கள் வெளியானது. இதில் ‘அந்தகன்’ திரைப்படம், ஹிந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக் என்றாலும், தமிழில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதேபோல், ‘தி கோட்’ திரைப்படத்தில் அவரது நடிப்பும், நடனமும் பாராட்டப்பட்டது. இந்நிலையில், பிரசாந்தின் அடுத்த படத்தை பிரபல இயக்குநர் ஹரி இயக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நடிகர் பிரசாந்தின் 55-வது திரைப்படமாகும். மேலும், இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இயக்குநர் ஹரியின் முதல் திரைப்படமான ‘தமிழ்’ படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தவர் பிரசாந்த்தே. இதனால், இந்த கூட்டணி சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது.
இந்த புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, பிரசாந்தின் பிறந்தநாளான ஏப்ரல் 6ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும், கதாநாயகியாக கயாடு லோஹர் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோருடன் பேசப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வருடம் பிரசாந்த் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுவதால், இரு படங்களுக்குமான அறிவிப்பும் அவரது பிறந்த நாளன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.