மலையாள ஸ்டார் மோகன்லாலின் மகனான பிரணவ் மோகன்லால், 2018 ஆம் ஆண்டில் ஜீத்து ஜோசப் இயக்கிய ‘ஆதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பிறகு ‘19ம் நூற்றாண்டு’ மற்றும் ‘ஹிருதயம்’ உள்ளிட்ட சில முக்கியமான படங்களில் நடித்துள்ளார். தற்போது, கடந்த ஆண்டு வெளியான மம்முட்டியின் ‘பிரம்மயுகம்’ படத்தை இயக்கிய சகாதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டயர்ஸ் இரே’ என்ற புதிய படத்தில் பிரணவ் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

‘பிரம்மயுகம்’ திரைப்படம் போலவே, ‘டயர்ஸ் இரே’ படமும் ஒரு ஹாரர் திரில்லர் வகை படமாக உருவாகி வருகிறது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலரில் மோகன்லாலின் குரல் ஒலித்தது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோகன்லாலும் இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கலாம் என்ற யூகங்கள் ரசிகர்களிடையே வலுப்பெற்றுள்ளன. இதற்கு முன்பாக பிரணவின் முதல் திரைப்படமான ‘ஆதி’யிலும் மோகன்லால் சில நொடிகள் தோன்றும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

