தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர் ராஜமௌலி, ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ‘எஸ்எஸ்எம்பி29’ படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்க நடிகர் மகேஷ் பாபு தனது தோற்றத்தில் மாற்றம் கொண்டுவருகின்றார். மேலும், இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைப்பார் என்று கூறப்படுகிறது.

ராஜமௌலி இதனை ஆக்சன் மற்றும் அட்வென்ச்சர் ஜானரில் உருவாக்க உள்ளதாகவும், இதன் கதை உலகின் பல்வேறு பகுதிகளில் நடப்பதாகவும் கூறியுள்ளார். தற்போது, இப்படத்தின் நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மகேஷ் பாபுவின் ஜோடியாக வெளிநாட்டு நடிகையரை நடிக்க வைக்க ராஜமௌலி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, இந்தோனேசிய நடிகை செல்சியா எலிசபெத் இஸ்லானுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், மேலும் இரண்டு வெளிநாட்டு நடிகைகளுடனும் பேச்சுவார்த்தை நடக்கிறது எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.