பிரபல பாலிவுட் நடிகரான அமீர் கான், தனது திரைப்படப் பயணத்தில் பல வெற்றிப் படங்களை வழங்கி முன்னணி நட்சத்திரமாக பெயர் பெற்றவர். இந்நிலையில், மும்பையில் நடைபெற்று வரும் உலக ஆடியோ விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டின் (WAVES) இரண்டாவது நாளில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது:

“நமது நாட்டின் பரப்பளவு மற்றும் மக்கள்தொகையை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இந்தியாவில் உள்ள திரையரங்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. நாட்டில் சுமார் 10,000 திரையரங்குகள் உள்ளன என்று நினைக்கிறேன். அதில் பாதி தென்னிந்தியாவில் உள்ளன; மீதமுள்ளவை பிற பகுதிகளில் உள்ளன. ஆனால், நம் மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பங்கும் கொண்ட அமெரிக்காவில் 40,000 திரையரங்குகள் உள்ளன. சீனாவில் கூட 90,000 திரையரங்குகள் இருக்கின்றன.
திரைப்படங்களை அதிகம் விரும்பும் நாடாக கருதப்படும் இந்தியாவில், சுமார் 2 சதவீத மக்கள் மட்டுமே திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படங்களை பார்கிறார்கள். மீதமுள்ள 98 சதவீதம் மக்கள் எங்கே படம் பார்க்கிறார்கள் என்பதே கேள்வி. இந்தியாவின் கொங்கண் போன்ற பல பகுதிகளில் திரையரங்குகள் இல்லையே. அங்கு வாழும் மக்கள் திரைப்படங்களைப் பற்றி கேள்விப்படுவார்கள். ஆனால் அவற்றைப் பார்ப்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கில்லை. இது மிகவும் வருத்தத்தைக் கொடுக்கும் விஷயம். எனவே, நாம் முதலில் செய்ய வேண்டியது, இந்தியாவிலுள்ள திரையரங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.