லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கூலி’. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ‘கூலி’ திரைப்படம் நேற்று (ஆகஸ்ட் 14) திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதேசமயம் வெளியான முதல் நாள் 151 கோடி வசூலை குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருமுறை பத்ம விபூஷன் விருது, திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். சினிமாவில் 50 ஆண்டுகளை தற்போது வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, அவரது நடிப்பில் பலவகையான பாத்திரங்கள் தலைமுறைகள் கடந்து மக்கள் மனங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவரது தொடர்ச்சியான வெற்றிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் வாழ்த்துகிறேன் என்றுள்ளார்.