டொவினோ தாமஸ் நடித்துள்ள ‘நரிவேட்டை’ திரைப்படம் இந்த மாதம் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது. இந்த திரைப்படத்தின் வாயிலாக நடிகர் சேரன், மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். இதில் அவர் ஒரு காவல் அதிகாரியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் இயக்கிய 2004ஆம் ஆண்டு வெளியான ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படம், இன்றும் ஒரு கல்ட் கிளாசிக் படமாகப் பலரது நினைவில் இடம்பிடித்து வருகிறது.

இந்தப் படம் விரைவில் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ரீ-ரிலீஸை முன்னிட்டு, ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒரு புதிய டிரெய்லர் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ‘நரிவேட்டை’ திரைப்படம் தொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ‘ஆட்டோகிராஃப்’ ரீ-ரிலீஸ் குறித்தும் கருத்து பகிர்ந்துள்ளார். அதில், “இன்றைய 2K பிள்ளைகளின் கவனத்தை ஈர்க்க அந்த AI டிரெய்லரை உருவாக்கினோம். அவர்கள் அதைக் கண்டு ஆர்வமாக வருவார்கள். ஆனால், அந்த காலத்தில் இருந்த பொறுமையை இப்போது எதிர்பார்க்க முடியாது.
அப்போது படம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் நீளமாக இருந்தது. தற்போது அதில் 20 நிமிடங்களை நானே குறைத்திருக்கிறேன். இன்று பார்த்தால் சில காட்சிகள் ‘க்ரிஞ்சி’யாகவும், ‘பூமர்’ பாணியிலாகவும் தோன்றுகிறது. நாமே நம்முடைய ரியாலிட்டியை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். அந்த நேரத்தில் அந்த சுவையை நமக்கே தெரியவில்லை. ஆனால் இன்று பார்க்கும் போது, சில இடங்களில் ஓவர் ஆக்டிங் போலத் தெரிகிறது. அதனால் தேவையற்ற காட்சிகளை நீக்கியுள்ளேன். மேலும், இன்றைய ஒலிவிதானம் மாறி விட்டது. 2004-ல் நாம் கேட்ட சவுண்ட் இன்று மிகவும் பழமையானதாகத் தெரிகிறது. எனவே, ‘ஆட்டோகிராஃப்’ படத்தின் ஒலியமைப்பையும் முழுமையாக மாற்றியமைத்துள்ளேன்.
இன்றைய திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் போலவே, அந்த படத்திலும் மாற்றங்கள் செய்துள்ளேன். முதலில் அது ஃபில்ம் வடிவில் இருந்தது. அதை டிஜிட்டல் ரீஸ்டோரேஷன் செய்து, டிஐ மூலம் ஒவ்வொரு பகுதியும் தனித்தனியாக வண்ணத் தோற்றம் மாறியிருக்கிறது. இவ்வளவு முயற்சியும், தொழில்நுட்பச் செயல்பாடுகளும் இன்றைய ரசிகர்கள் புத்திசாலிகள் என்பதற்காகத்தான். அவர்களை ஏமாற்ற முடியாது. அதனால் அவர்களுக்குத் தகுந்த சினிமா அனுபவம் வழங்க வேண்டும் என்ற நோக்கில் இதைச் செய்கிறேன் எனக் கூறியுள்ளார்.