சசிக்குமார் மற்றும் சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுக்கொண்டு திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளியாகிய ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திலும் சிம்ரன் சிறிய ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், சிம்ரன் நடித்த புகழ்பெற்ற ‘தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா’ பாடல், ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது. அந்தக் காட்சி வெளியாகிய பிறகு இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் சிம்ரன் தனது குழந்தைகள் பற்றி பேசினார். “எப்போதும் குடும்ப வாழ்க்கையை தனிப்பட்டதாக வைத்திருக்க நீங்கள் காரணம் என்ன?” என்ற கேள்விக்கு பதிலளித்த சிம்ரன், “குழந்தைகளிடம் ‘இல்லை’ என்று சொல்வது மிகவும் கடினமான விஷயம். அவர்களை சமூக ஊடகங்களிலிருந்தும் மற்றும் தொடர்ந்து கவனத்தை ஈர்க்கும் சூழ்நிலைகளிலிருந்தும் விலக்கி வைப்பது எளிதல்ல. இந்த சவால்களை நான் எதிர்கொள்கிறேன். ஒரு பிரபலமாக வாழ்வது எளிதான விஷயமல்ல. ஆனால் எங்கள் குடும்பத்தில் அனைவரும் திரைப்பட ரசிகர்கள்.
திரையரங்குகளுக்குச் செல்வது, அல்லது ஒரு திரைப்பட இரவாக ஒன்றாக படம் பார்ப்பது எங்களுக்குள் மகிழ்ச்சியை உருவாக்குகிறது. அது திகில் படமா இருந்தாலும், நகைச்சுவை படமா இருந்தாலும் எங்களால் ஒன்றாகக் கூடியே பார்க்க முடிகிறது. என் குழந்தைகளுக்கு ‘கண்ணத்தில் முத்தமிட்டாள்’ மற்றும் ‘பிரியமானவளே’ போன்ற திரைப்படங்கள் மிகவும் பிடிக்கும். அதுமட்டுமல்ல, அவர்கள் அஜித் மற்றும் விஜய்யின் தீவிர ரசிகர்கள். அவர்களின் திரைப்படங்களை அடிக்கடி பார்த்து ரசிப்பார்கள். ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ மற்றும் ‘தி கோட்’ போன்ற படங்களையும் அவர்கள் மிகவும் விரும்புகிறார்கள்,” என்று கூறினார்.
பின்னர், “உங்கள் குழந்தைகள் திரையுலகிற்குள் வந்தால், அவர்களுக்கு நீங்கள் என்ன ஆலோசனை தர விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டதற்கு, “திரைப்படத் துறையில் இருக்க வேண்டும் என்றால் அது மிகவும் கடினமான வேலை. இது முழுமையாக கடின உழைப்பை அடிப்படையாகக் கொண்டது. அதற்கு மாற்று எதுவும் இல்லை. மக்கள் பெரும்பாலும் அதிர்ஷ்டம் முக்கியம் எனக் கூறுவார்கள். நானும் அதற்கே ஒத்துக்கொள்கிறேன். ஆனால், நல்ல குணம் கொண்டவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் நிச்சயமாக வந்து சேரும் என்று நம்புகிறேன். வாழ்க்கையில் நல்ல செயல்களைச் செய்யும்போது, அதன் விளைவுகள் நம்மைச் சுற்றி நன்றாகவே வருவதாக நான் எண்ணுகிறேன். என் தாயார் மிகவும் வலிமையான மனதையுடையவர். அவர் காட்டிய உறுதியான மனநிலை எப்போதும் என்னைப் பெரிதும் ஈர்த்தது. அந்தக் குணத்தை நிச்சயமாக என் குழந்தைகளுக்கு வழங்கியிருக்கிறேன். முதன்முதலில், ஒருவராக நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதை கவனிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்,” என தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.