நடிகர் அஜித் குமார் சமீபத்தில் ஹாலிவுட் ரிப்போர்டர் இந்தியா யூடியூப் சேனலுக்குக் கொடுத்த நேர்காணலில், தன்னிடம் உதவியாளர்கள் இல்லாமல் எளிமையாகவே தனது வேலைகளைத் தானே செய்து கொள்வதற்கான காரணத்தை விரிவாக விளக்கியுள்ளார். “நான் மிகவும் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் வளர்ந்தவன். எனக்கு ஒரு மூத்த சகோதரர் இருந்தார். நான் ஏழு அல்லது எட்டு வயதிலிருந்தே சமைக்கக் கற்றுக் கொண்டேன். மிகச் சிறிய வயதிலேயே சமையலறையில் பணியாற்றிய நினைவுகள் எனக்கு இன்னும் தெளிவாக உள்ளன என்று கூறியுள்ளார்.

அதோடு, எல்லோரும் இதைச் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒருவர் பொது வாழ்க்கைக்குள் நுழைந்த பிறகு, அவருக்கு நிறைய பொறுப்புகள், கடமைகள், மற்றும் நிபந்தனைகள் உருவாகும். அவற்றை நிறைவேற்றுவதற்காக சில சமயங்களில் பிறர் உதவி தேவைப்படும். அது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும். எனினும், தினசரி உங்களுக்கு உதவி செய்யும் ஒரு குழு இருப்பதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அதை நான் தவிர்க்கும் காரணம் என்னவெனில், சில நேரங்களில் அந்த வசதி உங்களை உள்ளிருந்து பாழாக்கிவிடும்” என்றும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, “மற்றவர்கள் உதவிக்கு இருப்பது உண்மையில் நேரத்தை மிச்சப்படுத்தும், ஆனால் அது ஒருசில நேரங்களில் உங்களை பாழாக்கக்கூடும். 20 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் என்னைச் சந்தித்திருந்தால், உங்களுக்கு என்னைப் பிடிக்காமல் போயிருக்கும். நான் அப்போது பாழாகியவன் இல்லை, ஆனால் அப்போது எனக்கு ஒரு பெரிய குழு இருந்தது. உங்களைச் சுற்றி அதிகமானவர்கள் இருந்தால், வாழ்க்கை சிரமமாகிவிடும். நான் என் நேரத்தின் பெரும்பகுதியை அவர்களுக்கிடையிலான சிறு சண்டைகளைத் தீர்க்கவும், அவர்களை நிர்வகிக்கவும் வீணடித்தேன். அதனால் தான் முடிந்தவரை சுயமாக இருப்பதே நல்லது என்று எண்ணினேன். சில நேரங்களில் மற்றவரின் உதவியின்றி இருக்க முடியாது என்பது உண்மை, ஆனால் பெரும்பாலும் நாமே அனைத்தையும் சமாளிக்க முடியும். இப்போது நான் எடுக்கும் முடிவுகள் குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். மற்றவர்களிடமிருந்து சற்று விலகி இருப்பது எனக்கு அமைதியைக் கொடுக்கிறது” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது, “திரைப்பட ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்புக்கும் ஊக்கத்திற்கும் நான் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன். ஆனால் அதே நேரத்தில், அந்த அன்பும் புகழும் சில சமயம் போதைப்பொருளைப் போல மாறிவிடும். புகழ் என்பது ஒரு விதமான போதை. அதனால் தான் என் முந்தைய அனுபவங்களின் அடிப்படையில் நான் இப்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறேன். ரசிகர்கள் தரும் புகழை நான் ரசிக்கிறேன், ஆனால் அதைத் தொட விரும்பவில்லை; அதன் தாக்கத்தில் நான் இருக்கவும் விரும்பவில்லை” என்று அவர் மனம்விட்டு பகிர்ந்துள்ளார்.

