உதகை அருகே நடிகர் விஷால் நடிப்பில் உருவாகும் ‘மகுடம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கு, மறைந்த நடிகர் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி, விஷால் அவரின் படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர், படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவருக்கும் தனது கையால் மதிய உணவை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால் கூறுகையில், “கேப்டன் விஜயகாந்த் மறக்க முடியாத நபர். நடிகராகவும், அரசியல்வாதியாகவும் அவர் எங்கு சென்றாலும் முன்னுதாரணமாக திகழ்ந்தார். இன்று நாம் சினிமா சூட்டிங் தளத்தில் உணவு உண்ணும் பழக்கம், விஜயகாந்த் காரணமாகத்தான் உருவானது. அவர் எப்போதும் சாப்பிடுவதை அனைவரும் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்பார். பசியுடன் வந்தவர்களை பசியாற வைத்தே அனுப்புவார். அது தான் எனக்கு ஒரு தூண்டுதல்.விஜயகாந்த் வழியில் உணவு வழங்க வேண்டும் என்பது என் ஆசை. இன்று அவர் எங்களிடையே இல்லாவிட்டாலும், கொண்டாடத்தக்க நபராகவே இருக்கிறார். நடிகர் சங்க கட்டிடத்தை கட்ட வேண்டும் என்ற அவரது கனவு இன்னும் இரண்டு மாதங்களில் நிறைவேறுகிறது. கட்டிடப்பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. செப்டம்பர் இறுதிக்கோ அல்லது அக்டோபர் மாதத்தில் திறப்பு விழா நடைபெறத் தயாராகி வருகிறது.
மேலும், விஜய் அரசியலுக்கு வந்து தனது இரண்டாவது மாநாட்டை கோலாகலமாக நடத்தியிருப்பதற்கு வாழ்த்துகள். புதியவர்கள் அரசியலுக்குள் வந்தால் வாழ்த்தப்பட வேண்டும். சமூக சேவைக்காக இன்னொரு கட்சி வருவது நல்லதே. 2026 தேர்தலில் நிறைவேறாமல் இருக்கும் திட்டங்களை வாக்குறுதியாக கூறி செயல்படுத்தினால் மகிழ்ச்சி. நல்லது செய்வது தான் அரசியல் என்றால், நான் ஏற்கனவே அரசியலுக்குள் வந்துவிட்டேன். நடிகர் சங்க கட்டிடம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஓரிரு மாதங்களில் திறப்பு விழா நடைபெறும் என்று தெரிவித்தார்.