மோகன்லால் மற்றும் இயக்குநர் ஜீத்து ஜோசப்பின் கூட்டணியில் உருவான ‘‘திரிஷ்யம்’’ திரைப்படம், மலையாள சினிமாவில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த வெற்றியின் பின்னணியில், இந்தப் படம் தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தி மற்றும் சீன மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டதோடு, அதன் இரண்டாம் பாகமான ‘‘திரிஷ்யம் 2’’ கொரோனா காலத்தில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இதன் மூன்றாம் பாகம் தயாராக உள்ளதைக் குறித்து இயக்குநர் ஜீத்து ஜோசப் ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும் இந்த மூன்றாம் பாகத்துடன் திரிஷ்யம் தொடர் முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. மலையாளம் மட்டுமல்லாது, தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும். மேலும் மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் படம் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இயக்குநர் ஜீத்து ஜோசப் தற்போது “மிராஜ்” மற்றும் “வலது வசத்தே கள்ளன்” ஆகிய இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார்.சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “திரிஷ்யம் 3 திரைப்படத்தின் முழு திரைக்கதையும் முடித்துவிட்டேன். குறிப்பாக அதன் கிளைமாக்ஸை எழுதுவது எனக்கு மிகவும் மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வை ஏற்படுத்தியது. இரண்டு படங்களின் வேலைகளும் தொடர்ந்து இருந்ததால், தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து, திரிஷ்யம் 3 படத்தின் கதையையும், கிளைமாக்ஸையும் எழுதி முடித்தேன். படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும்” என தெரிவித்தார்.