நடிகை நித்யா மெனன் அவர் நடித்த மலையாளத் திரைப்படமான “19 (1) ஏ” குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்துள்ளார். இந்து வி.எஸ் என்ற பெண் இயக்குநர் இயக்கிய இந்த படம் 2022-ஆம் ஆண்டு நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில் நித்யா மெனனுடன் விஜய் சேதுபதியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்திற்கு பிறகு, அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடித்த “தலைவன் தலைவி” திரைப்படமும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், “19 (1) ஏ” திரைப்படம் குறித்து பேசியுள்ள நித்யா மெனன், “இந்தப் படம் உருவாகி மூன்று ஆண்டுகள் ஆகியுள்ளன. அத்தி மரத்தின்கீழ் கிடைக்கும் குளிர்ச்சி போன்ற உணர்வை இந்தப் படம் தருகிறது. அந்த இடத்தில் தூங்கவேண்டும் என எண்ணத் தோன்றும். ஏனெனில் அந்த இடம் மிகவும் அமைதியானதாக இருக்கும். இப்படத்தில் அத்தி மரம் போன்ற ஒன்று எங்களைச் சுற்றி கதையின் ஒரு வலுவான கதாப்பாத்திரமாக இருந்தது.
இந்த அனுபவம் எனக்கு அதிர்ஷ்டம் அல்லது ஒரு சிறந்த ஆசீர்வாதமாக இருக்கலாம். இதுப்போன்ற படங்களித் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கான ஊக்கம். இது முற்றிலும் வேறுபட்ட படம். வித்தியாசமான கருத்துகளுடன் கூடிய படங்களில் நடிக்கவேண்டும் எனும் விருப்பம் உள்ளது. முழு நம்பிக்கையுடனும் இதுப்போன்ற படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.