தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின், 2020 ஆம் ஆண்டு உதயநிதி மற்றும் அதிதி ராவ் நடித்த சைக்கோ திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு, பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். 2023 ஆம் ஆண்டு, விஜய் சேதுபதியை முன்னணி கதாபாத்திரத்தில் கொண்டு ட்ரெயின் என்ற திரைப்படத்தை இயக்கினார்.
இந்தப் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். முகம் முழுவதும் அடர்த்தியான தாடியுடன், அவரது புதுமையான தோற்றம் பார்வையாளர்களை ஈர்க்கும். இப்படத்துக்கு ஃபௌசியா பாதிமா ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இவர் இதற்கு முன் உயிர், விசில், இவன் போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். 21 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் ஒளிப்பதிவு செய்த படம் ட்ரெயின் ஆகும்.
ட்ரெயின் திரைப்படத்தின் இசையமைப்பை மிஷ்கின் நேரடியாக கவனித்துள்ளார். இதில் இடம்பெற்ற ஒரு பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுவரை படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக தயாரிப்பாளரான எஸ். தாணு அறிவித்துள்ளார். அவர் கூறியதாவது: “மிஷ்கின் தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவர். ட்ரெயின் ஒரு பிரம்மாதமான படைப்பாக உருவாகியுள்ளது. இது மிகவும் சுவாரஸ்யமான திரில்லராக இருக்கும். 15 ஆண்டுகளுக்கு முன்பு அவர் என்னை சந்தித்தார். அப்போது நான் அவரை தவறவிட்டேனா, அல்லது அவர் என்னை தவறவிட்டாரா என எனக்குத் தெரியவில்லை. இனி அது எப்போது முறைப்படுத்தப்படும் என சந்தோஷமாக உள்ளேன்” என்றார்.