இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘பேட் கேர்ள்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்துடன் தனது தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாக அவர் சமீபத்தில் அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில் ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்கு பேட்டியளித்த வெற்றிமாறன், தனது ஸ்கிரிப்ட் எழுதும் முறை குறித்து பகிர்ந்துள்ளார். அதில், நான் என் நடிகர்களுக்கு ஸ்கிரிப்ட் கொடுக்க மாட்டேன். நான் ஸ்கிரிப்ட் முழுமையாக எழுதாமல் இருக்கும் போது எப்படிக் கொடுக்க முடியும்? எந்தக் காட்சி எந்த நாளில் படமாக்கப்படும் என்பது மட்டுமே நடிகர்களுக்குத் தெரியும். அந்தக் காட்சியில் என்ன மாற்றங்கள் நடக்கப்போகின்றன என்பது அவர்களுக்குத் தெரியாது.
முக்கியமான காட்சிகளுக்கு அதிகமான விவரங்கள் தேவைப்பட்டால், முன்கூட்டியே நான் நடிகர்களுக்கு தெரிவிப்பேன். ஒரு படத்தின் தொடக்கத்தில் சுமார் 100 பக்கங்கள் மட்டுமே இருக்கும் ஸ்கிரிப்ட், படப்பிடிப்பு முடியும் போது 400 பக்கங்களாக மாறிவிடும். என் முதல் டிராஃப்டை நம்பக் கூடாது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த முறையால் சில நடிகர்கள் அப்செட் அடைவார்கள் அதனாலேயே சிலர் என்னுடன் பணியாற்ற விரும்புவதில்லை என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.