2022-ஆம் ஆண்டு, பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “Love Today”. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதையடுத்து, தற்போது ஹிந்தியில் இதன் “Loveyapa” என்ற ரீமேக் தயாராகியுள்ளது.
இந்தப் படத்தை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். இதில், பிரபல நடிகர் ஆமீர்கானின் மூத்த மகன் ஜுனைத் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அடுத்த மாதம் 7-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
தற்போது, படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நடிகை குஷி கபூர், படத்தில் தான் ஏற்ற “பானி” என்ற கதாபாத்திரத்தை பற்றிப் பேசினார். அவர் கூறுகையில், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு, நான் ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்திருந்தேன். அப்போது இயக்குநர் அத்வைத் என்னிடம் வந்து, ‘உங்களால் சத்தமாக பேச முடியுமா? இப்படத்தில் உங்கள் கதாபாத்திரம் மிகவும் உற்சாகமாக பேச வேண்டும்’ என்றார். அதற்காக நான் முயற்சி செய்து பார்த்தேன். பின்னர், நான் பேசத் தொடங்கியவுடன், ‘இந்தக் குரல் எங்கிருந்து வந்தது?’ என நானே ஆச்சரியப்பட்டேன். அப்படிப் படத்தில் நடிக்கவே மிகவும் வேடிக்கையாக இருந்தது” என்றார்.