தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், பாடகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவராக விளங்குபவர் மிஷ்கின். அவரது இயக்கத்தில் வெளிவந்த படங்கள், அவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள், அவர் பாடிய பாடல்கள் என அனைத்திற்கும் தனித்துவமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
அவர் தற்போது இயக்கி வரும் படம் ‘ட்ரைன்’. கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், விஜய் சேதுபதி நடித்து உருவாகியுள்ள இப்படம், மார்ச் மாதத்தில் வெளியாகவுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது, மேலும் படத்தின் ரிலீஸ் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மிஷ்கின் இயக்குநராக மட்டுமல்லாமல், நடிகராகவும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிராகன்’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மிஷ்கினிடம், அவரது புகைப்படத்தை காட்டி அவர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மிஷ்கின்,”கண்ணு தெரியாத மான்ஸ்டர். சினிமா என்பது கொஞ்சம் நல்லவர்களும், நிறைய கெட்டவர்களும் இருக்கும் இடம். இதில் நான் அதிகம் கஷ்டப்பட்டுக் கொண்டு, எதோ சமாளித்துக் கொண்டு இருக்கிறேன். விரைவில் சினிமாவை விட்டு வெளியே போகப் போகிறேன்” என கூறினார்.மிஷ்கினின் இந்தக் கருத்து ரசிகர்களையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது.