தமிழில் திருச்சிற்றம்பலம் மற்றும் காதலிக்க நேரமில்லை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகை நித்யா மேனன் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள ‘தலைவன் தலைவி’ மற்றும் தனுஷுடன் நடித்துள்ள ‘இட்லி கடை’ ஆகிய இரு படங்களிலும் தனது பணியை முடித்துள்ளார். இதில் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் நாளையே திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, நித்யா மேனன் தனது திருமணம் குறித்த ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

அதாவது, “நான் மூன்று மாதக் குழந்தையாக இருக்கும்போது என் அம்மா வேலைக்கு செல்ல வேண்டியிருந்தது. எனவே என் பாட்டிதான் என்னை வளர்த்தார். சிறுவயதிலிருந்து தனிமையை விரும்பும் இயல்பே எனக்கு இருந்தது. பின்னாளில் நான் காதலில் விழுந்தேன். ஆனால் அந்த காதல் எனக்குப் பெரிதாக மகிழ்ச்சியைத் தரவில்லை; மாறாக அது வலியையே அதிகமாகத் தந்தது. நான் காதலில் விழுந்த ஒவ்வொரு முறையும் என் இதயம் முறிந்து போனது. நான் ஆசைப்படும் அந்த அழகான வாழ்க்கை இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. அதனால் தான் இப்போது காதல் உணர்வுகளிலிருந்து நான் முற்றிலும் விலகி விட்டேன்.
நான் தற்போது என் சினிமா வாழ்க்கையில் முழுமையாக கவனம் செலுத்துகிறேன். ஆன்மிகத்திலும் ஈடுபாடுடன் இருக்கிறேன். அதே நேரத்தில், நான் வாழ்க்கையில் திருமணம் செய்ய மாட்டேன் என்று உறுதியாக ஏதேனும் முடிவெடுத்து விடவில்லை. உண்மையான ஒரு துணை எனக்குக் கிடைத்தால், அப்போதே திருமணம் செய்வேன். ஆனால் தற்போதைய எனது தனிமையான வாழ்க்கை எனக்கு மனநிறைவாகவே இருக்கிறது. இந்த வாழ்க்கையை நான் ரசித்து, மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறேன்,” என நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.