இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் எழுதி இயக்கிய ‘பாட்டல் ராதா’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்த இந்தப் படத்துக்கு ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாக உள்ளது. அதே தேதியில், நடிகர் மணிகண்டன் நடித்த ‘குடும்பஸ்தன்’ திரைப்படமும் வெளியாக இருக்கிறது. இதனால் இரண்டு படங்களிடையே போட்டி ஏற்படும் சூழல் நிலவுகிறது.
‘குடும்பஸ்தன்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் மணிகண்டன், ‘பாட்டல் ராதா’ திரைப்படத்தை பார்த்து மிகவும் உற்சாகமடைந்ததாக தெரிவித்துள்ளார்.அவர் கூறியது: “நான் ஒரு படத்தை பார்த்து அழுவது மிகவும் அரிது. ஆனால் ‘பாட்டல் ராதா’ படத்தை பார்த்த போது, என்னால் அழாமல் இருக்க முடியவில்லை. இது உண்மையிலேயே மிகச்சிறந்த படமாக அமைந்துள்ளது. குரு சோமசுந்தரம் சிறந்த நடிகர். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும்” என்று மனமுவந்துக் கூறியுள்ளார்.