தக் லைஃப் திரைப்படத்தின் விளம்பர நிகழ்வுக்காக ஒரு சிறப்பு நேர்காணலை ஏற்பாடு செய்து, அந்த காணொளியை ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளனர். அந்த நேர்காணலில் நடிகர் சிம்பு, கமல்ஹாசனைப் பற்றிக் கேட்டபோது மிகவும் உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்துள்ளார்.

அதில்சிம்பு கூறியதாவது: “இந்தப் படத்தில் நடித்தது எனக்கு சுலபமாக இருந்தது. கமல் சார், மணி சார் இருவரும் இருப்பதால், ஆரம்ப இரண்டு நாட்கள் மட்டும் என்னை ஒரு கவலை சூழ்ந்தது — ‘எப்படி நடிப்பது’ என்ற எண்ணத்தால். ஆனால் கமல் சார் மிகச் சிறந்த கம்ஃபோர்ட் அளித்தார். அதன் பிறகு என்னுடைய மனநிலையும் ‘நம்மாலும் முடியுமே’ என்ற நிலையில் வந்துவிட்டது.
எனக்கு நடிப்பில் எந்த சந்தேகமும் இருந்தால், நேரடியாக கமல் சாரிடம் கேட்டுவிடுவேன். ஒரு காட்சியில் ஆறு அல்லது ஏழு பேர் ஒரே நேரத்தில் நடிக்க வேண்டிய சூழல் இருந்தது. அந்தக் காட்சியில் எல்லோருமே தங்கள் வசனங்களை சரியாகச் சொல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. அந்த இடத்திற்கு கமல் சார் நேரில் வந்தார். அவர்களெல்லாரின் வசனங்களையும் அவரே சரியாகச் சொல்லி, சற்றும் தடை இல்லாமல் நடித்து காட்டினார்.
‘அந்நியன்’ படத்தில் போல ஒரு நடிகர் இரண்டு வேறு வேறு கதாப்பாத்திரங்களை மாறி மாறி செய்வது நாம் பார்த்திருப்போம். ஆனால் கமல் சார் ஒரே நேரத்தில் ஆறு, ஏழு கதாப்பாத்திரங்களை கையாளும் திறமையை நேரில் காட்டினார். அது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. அவர் அருகிலிருப்பது மட்டுமே ஒரு பெரிய உதவியாக இருந்தது. அவருடன் பணியாற்றியது எனக்கு பெரும் அனுபவமாக இருந்தது,” என்று சிம்பு மிகவும் உணர்வுடன் கூறியுள்ளார்.