அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அதர்ஸ்’ திரைப்படத்தில் ‘96’ படத்தில் ஜானுவாக நடித்த கவுரி கிஷன், இப்போது டாக்டராக நடிக்கிறார். இதில் ஹீரோவாக ஆதித்ய மாதவன் நடித்துள்ளார்.

இப்படம் குறித்து கவுரி கிஷன் கூறுகையில், “இந்தக் கதையின் மையக்கரு செயற்கை கருத்தரிப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிகிச்சை முறையை அடிப்படையாகக் கொண்டது. இதில் நான் டாக்டராகவும், ஹீரோ போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறோம். சிலர் இதை ‘குற்றம் 23’ படத்துடன் ஒப்பிடுகிறார்கள், ஆனால் அந்த படத்துக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை; இரண்டும் முற்றிலும் வெவ்வேறு கதைகள்.
தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நான் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன், ஆனால் ‘96’ படத்தில் ஜானு எனும் கதாபாத்திரத்தை இன்னும் மக்கள் மறக்கவில்லை; இன்றும் அதை அன்புடன் கொண்டாடுகிறார்கள். அந்தக் கதாபாத்திரம் எனக்கு பெரும் வரவேற்பை அளித்தது. ஆனால் அதை விட சிறந்த, இன்னும் ஆழமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை என்னுள் எப்போதும் இருக்கிறது. அது ஒரு விதமான பேராசையாகவே சொல்லலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

