நடிகர் பிரித்விராஜ் கடந்த ஒரு வருடத்தில் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் திரைப்படங்களில் நடித்தார். மேலும், மோகன்லாலுடன் இணைந்து ‘லூசிபர்’ படத்தின் தொடர்ச்சியாக ‘எம்புரான்’ என்ற திரைப்படத்தையும் இயக்கி வெளியிட்டார்.

இப்போது அவர் நடித்துள்ள ஹிந்திப் படம் ‘சர்ஷமீன்’, திரையரங்குகளில் வெளியாகாமல், ஜூலை 25ஆம் தேதி நேரடியாக ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரபல நடிகை கஜோல் கதாநாயகியாக நடித்துள்ளார். இதை பிரபல இயக்குநர் கரண் ஜோஹர் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் கஜோலுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து நடிகர் பிரித்விராஜ் கூறும்போது, “கஜோல் ஒரு மிகவும் திறமைமிக்க நடிகை. அவரைப் போன்ற நடிகைகளுடன் பணியாற்றும்போது, அவர்கள் உங்கள் நடிப்பை வெளிக்கொணர ஒரு அரங்கத்தை தயார் செய்து உங்களை தக்க வைத்துவிடுவார்கள். சில நடிகர்களுடன் ஒரு காட்சி செய்யும் முன் ரிகர்சலாக இருந்தாலும் சரி, அல்லது ஒரே காட்சிக்கு ஐந்து முறை ரீடேக் எடுத்தாலும் சரி, ஒவ்வொரு முறையும் வேறுபட்ட விதத்தில் நடிப்பை வழங்கும் திறன் அவர்களுக்கு இருக்கும். கஜோலும் அப்படிப்பட்ட ஒரு தனித்துவமானவர். இதற்கு முன்னர் இப்படியொரு விசேஷமான கலைப்பணியை நான் நடிகர் மோகன்லாலிடம் தான் பார்த்திருக்கிறேன்” எனக் கூறினார்.