20 ஆண்டுகளாக வித்தியாசமான கதைகளுடன் ஸ்டைலிஷான படங்களை இயக்கி வரும் கவுதம் மேனன், தற்போது மலையாள திரையுலகில் முதன்முறையாக அடியெடுத்து வைத்து, மம்முட்டியுடன் இணைந்து டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/01/1000148313-1024x615.jpg)
இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியாக பல்வேறு தொலைக்காட்சி சேனல்களுக்கு பேட்டி அளித்த அவர், தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தைப் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும்போது, நகைச்சுவையாக, “எந்த படத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள்? அதில் ஒரு பாடல் மட்டும் தான் ஞாபகம் இருக்கிறது. அது என் படம் அல்ல, யாரோ ஒருவர் செய்தது” என்று கூறினார். இதனால், அந்த படத்தில் தனுஷின் அதிகப்படியான குறுக்கீடு இருந்ததால், தனது விரக்தியை மறைமுகமாக வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் கருதினர்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000147101-1-1024x576.jpg)
இதன் பிறகு, மற்றொரு பேட்டியில் கவுதம் மேனன், “எனை நோக்கி பாயும் தோட்டா படம் குறித்து நான் சொல்லியதெல்லாம் வெறும் நகைச்சுவைக்காக தான். எனது படங்களில் எனக்கு விருப்பமானபடி எடுக்க முடியாத ஒரே படம் அதுவாகும். கடைசி 20 நாட்களுக்காக எடுக்க வேண்டிய காட்சிகளை வெறும் 5 முதல் 10 நாட்களில் முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், அந்த படத்தின் தயாரிப்பாளர் நானாகவே இருந்ததால், நான் இதைப் பற்றிச் சொல்ல முடிகிறது. வேறு யாராவது தயாரிப்பாளராக இருந்து இதைச் சொன்னால் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கும். எனவே, அதை வெறும் ஜாலிக்காக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று விளக்கம் அளித்தார்.