இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் சல்மான்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சிக்கந்தர்’ படம் வரும் 30ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படம் குறித்த ஒரு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் ஏ.ஆர். முருகதாஸ் கூறியதாவது, “மும்பையில் ஒரு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தபோது, அந்த படத்தில் சல்மான்கான் கலந்து கொண்டிருந்தார். அப்போது நானும் அங்கு சென்று அவரை முதன்முறையாக நேரில் சந்தித்து உரையாடினேன். அச்சந்திப்பில், அவருடன் இணைந்து ஒரு படம் செய்ய விரும்புவதாக கூறினேன். உடனே அவர், நானும் உங்களுடன் ஒரு படம் செய்ய விரும்புகிறேன் என்று பதிலளித்தார்.
அதற்குப் பிறகு சில ஆண்டுகள் கடந்த நிலையில், ஒருமுறை அவர் எனக்கு அழைப்பு வைத்து, ஒரு கொரிய படத்தை ரீமேக் செய்யலாமா என்று கேட்டார். ஆனால், நான் இயக்கும் படமென்றால் அது எனது சொந்தக் கதையாகவே இருக்க வேண்டும் என கூறி மறுத்துவிட்டேன். பின்னர், கொரோனா காலகட்டத்தில் தயாரிப்பாளர் சாஜித் நாடியாத்வாலா ஒரு நல்ல கதைக்காக என்னை சந்தித்தார். எங்களுக்குள் பேச்சுவார்த்தை நடந்தது. அதற்குப் பிறகு, நாங்கள் இருவரும் மும்பையில் உள்ள சல்மான்கானின் வீட்டில் அவரை சந்தித்து கதையை கூறினோம். சல்மான், கதையை அரை மணி நேரம் கேட்டு கொண்டிருந்தார்.
பின்னர், சிகரெட்டை புகைத்தபடி எழுந்து விட்டு, ‘நான் எப்படி வேலை செய்வேன் தெரியுமா?’ என்று என்னிடம் கேட்டார். நான் ‘தெரியாது’ என்று பதிலளித்தேன். அதற்கு அவர், ‘நான் பிற்பகல் 12 மணிக்கு வேலை துவங்கி அதிகாலை 2 மணி வரை வேலை செய்வேன். உங்களுக்கு அது சரியா?’ என்று கேட்டார். அதனால், அவர் என் கதையை விரும்பி விட்டார் என உணர்ந்தேன். ஒரு காட்சி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து எங்களுக்கு வெவ்வேறு கருத்துகள் இருக்கும். முடிவெடுக்க முடியாதபோது, இரண்டு முறையிலும் படப்பிடிப்பு செய்து, எடிட்டிங் போது இறுதி முடிவெடுக்கிறோம்.
ஒரு சூப்பர் ஸ்டாரை வைத்து சாதாரணமான படம் எடுப்பது சாத்தியமில்லை, ஏனெனில் ரசிகர்களை கவரும் அனைத்து அம்சங்களும் அந்தப் படத்தில் இருக்க வேண்டும். சூப்பர் ஸ்டார்களுடன் பணிபுரியும் போது, திரைக்கதைக்கு 100% உண்மைநிலையுடன் செல்ல முடியாது. பார்வையாளர்களுக்காக, ரசிகர்களுக்காக, ஓப்பனிங்கிற்காக சில சமரசங்களை செய்ய வேண்டியிருக்கும். ரசிகர்களைப் பற்றிய சிந்தனையுடன் அவர்களுக்காக வேலை செய்ய வேண்டும். ரசிகர்களை மகிழ்விப்பதற்காக சூப்பர் ஸ்டார்கள் எடுக்கும் முயற்சிகளை நாம் பாராட்டவேண்டும்,” என அவர் கூறினார்.