பிக்பாஸ் புகழ் ராஜு ஜெயமோகன் நடித்துள்ள ‘பன் பட்டர் ஜாம்’ திரைப்படம் வரும் ஜூலை 18ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ஸ்டீலர் காட்சி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில், நடிகர் விஜய்யின் பிரபலமான கைகளால் ‘எக்ஸ்’ ஸ்டைல் டாடா காட்டும் செயலை ராஜு நகைச்சுவையாக செய்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்து நடிகர் விஜய் ராஜுவுக்கு வாழ்த்து தெரிவித்ததாக ராஜு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “அன்புக்குரிய தளபதி விஜய் அண்ணாவிடம் இருந்து ஒரு கால் வந்தது. ‘வேற லெவல் பா… உண்மையிலேயே தியேட்டர்ல தான் பாக்கணும் போல இருக்கு’ என்றார். இதைவிட எனக்கு என்ன வேணும்? நான் தளபதியை சிரிக்க வைத்திருக்கிறேன். இது எனக்கே பெருமையான விஷயம்… நன்றி தலைவா!” என்று ட்வீட் செய்துள்ளார். மேலும், “இந்த நாளை என் வாழ்நாளில் பொக்கிஷமாக வைத்திருப்பேன்” எனவும் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
இதுவரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்த ராஜு, இப்போதுதான் முதன்முறையாக கதாநாயகனாக நடித்துள்ளார். காதல் மற்றும் நட்பில் ஏற்படும் குழப்பங்களை கலகலப்பாக சொல்லும் படமாக இது இருக்கும் என இயக்குநர் ராகவ் மிர்தாத் விகடன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.