சமீபத்தில் மணிகண்டன் நடிப்பில் வெளியான ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் பல்வேறு தரப்பினரிடையிலும் சிறந்த பாராட்டுகளைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்த முக்கியமான நடிகை சான்வே மேக்னா.. ‘வெண்ணிலா’ எனும் கதாபாத்திரத்தில் அவர் அளித்த இயற்கையான மற்றும் உணர்ச்சிப் பூர்வமான நடிப்பு, அந்தக் கதாபாத்திரத்தை பார்வையாளர்களின் மனதில் நீண்ட நாட்கள் நினைவில் இருக்குமாறு மாற்றியுள்ளது. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு சான்விக்கு தொடர்ந்து புதிய திரைப்பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் சான்வேக்கு ஆரம்பத்தில் இருந்ததாக இல்லை. ஐதராபாத்தில் கல்வி பயின்றுகொண்டிருந்தபோது, அவரில் இருக்கும் ஒருவித சிறப்புத்தன்மையை நடிகை ஜெயசுதா உணர்ந்தார். அதற்காகவே அவர் சான்வேக்கு முதல் பெரிய வாய்ப்பை வழங்கினார். அந்த சந்திப்பு சான்வேக்கு நடிப்பில் ஒரு தீவிர ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு ‘பிட்ட காதலு’ மற்றும் ‘புஷ்பக விமானம்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அவர் அறிமுகமானது ‘குடும்பஸ்தன்’ படத்தின் வாயிலாகவே.
‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சான்வே மேக்னாவுக்கு தொடர்ச்சியாக குடும்ப அடிப்படையிலான திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்துகொண்டே உள்ளன. இருப்பினும், அவர் தனக்குப் பொருத்தமான அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க விரும்புகிறார். குறிப்பாக ஆக்ஷன் படங்களில் நடிப்பதற்கும் அவர் அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.
இந்தக் குறித்து சான்வே கூறும்போது, ‘குடும்பஸ்தன்’ எனக்கு கதாநாயகியாக மிகப்பெரிய அடையாளம் கொடுத்த படம். இந்தப் படத்தில் நான் நடித்த ‘வெண்ணிலா’ கதாபாத்திரம், பலர் தங்களது வாழ்க்கையோடு ஒப்பிட்டு ரசித்ததைப் பார்த்து மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்கள் தரும் பாராட்டுகள் எனக்கு பேரதிர்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றன. தொடர்ந்து அதே மாதிரியான படங்கள் வருவது உற்சாகத்தை தருகிறது. ஆனாலும், நான் விரும்புவது வேறுவிதமான கதைகளில் நடிப்பது. குறிப்பாக ஆக்ஷன், ஸ்பை த்ரில்லர், தீவிரமான விளையாட்டு சார்ந்த கதைகள் மற்றும் ரொமான்டிக் காமெடி போன்ற வெவ்வேறு ஷேடுகள் கொண்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இத்தகைய படங்கள் தான் ஒரு நடிகையின் முழுமையான திறமைகளை வெளிக்கொணர உதவுவதாக நினைக்கிறேன்,” என்றார்.