மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு, மம்முட்டி நடித்த உட்டோப்பியாயிலே ராஜாவு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜுவல் மேரி. அதே ஆண்டில், மீண்டும் மம்முட்டியுடன் பத்தே மாதிரி படத்திலும் ஜோடியாக நடித்தார். பின்னர் தமிழில் அண்ணாதுரை, மாமனிதன் ஆகிய படங்களில் நடித்தார். கடந்த ஏழு ஆண்டுகளில் அவர் நடித்தது மொத்தம் ஐந்து படங்களில் மட்டுமே. இதனிடையே, சில தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றினார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில், விவாகரத்து மற்றும் புற்றுநோய் பாதிப்பு என்ற இரண்டு பெரிய சவால்களை சந்தித்து அதிலிருந்து மீண்டதாக சமீபத்திய ஒரு பேட்டியில் அவர் அதிர்ச்சித் தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது: “2021 முதல் எனக்கும் என் கணவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் பிரிந்து வாழத் தொடங்கினோம். பரஸ்பரமாக விவாகரத்து பெறலாம் என நினைத்தாலும், அது எனக்கு எளிதாக அமையவில்லை. கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, கடந்த ஆண்டு விவாகரத்து கிடைத்தது. அந்த மகிழ்ச்சியில் வெளிநாடுகளுக்குச் சென்று, அங்கு வசிக்கும் என் நண்பர்களுடன் சந்தோஷமாக காலத்தை கழித்தேன். திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது, புற்றுநோயின் ஆரம்ப நிலை இருப்பது தெரியவந்தது. அதை அறிந்ததும் நான் முற்றிலும் தளர்ந்து போனேன்.
அப்போது எனக்கு சகோதரி போல இருந்த டாக்டர் சித்ரா, எனக்கு உற்சாகம் அளித்து, தேவையான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொள்ளச் செய்தார். ஏழு மணி நேர அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பின்னர், கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் சரியாக பேச முடியாமல் இருந்தேன். ஆனால் படிப்படியாக அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வந்தேன். மீண்டும் ஒரு பரிசோதனை செய்ய, அதன் முடிவைப் பார்த்த டாக்டர், ‘நீங்கள் புற்றுநோயிலிருந்து முழுமையாக விடுபட்டுவிட்டீர்கள்’ என்று சொன்னார். அந்த தருணமே எனக்கு உயிர் திரும்பி வந்தது போல இருந்தது என்று கூறினார்.