நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘ஆர்யன்’ திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. குற்றத் திரில்லர் வகையைச் சேர்ந்த இப்படத்தில், இயக்குநர் செல்வராகவன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் குறித்து செல்வராகவன் அளித்த பேட்டியில் கூறியதாவது,நடிப்புக்காக நான் எதையும் செய்ய மாட்டேன்; அது இயல்பாகவே வர வேண்டும். ஒரு படத்தை இயக்கும்போது, வசனங்களின் மூலம் உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டிய கடமை இருக்கும். ஆனால், நடிப்பில் எக்ஸ்ப்ரெஷன் மூலமாகவே அந்த உணர்ச்சியை வெளிக்கொணர வேண்டும். ‘ஆர்யன்’ படத்தில் எனது கதாபாத்திரம் முழு படத்திலும் முக்கியமாக பயணிக்கிறது. விஷ்ணு விஷாலுக்கு மிகப் பெரிய மனசு உள்ளது; அவர் ஹீரோவாக நடித்திருக்கும் படத்தில் எனக்கும் முக்கியமான இடம் விட்டுக் கொடுத்துள்ளார்,” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், இப்போது பலர் எனக்கு வித்தியாசமான கதைகளைச் சொல்கிறார்கள். ஆனால், சில நல்ல கதைகள் படமாக மாறாமல் இருக்கின்றன. அப்படி சொல்லப்பட்ட சில நல்ல கதைகள் இன்னும் தொடங்கப்படவே இல்லை. நடிப்புக்குள் நுழைந்த பிறகு தான், உடல் ரீதியாக நம்மை பராமரிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். கை, கால், முகம்—எல்லாவற்றையும் கவனிக்க வேண்டியிருக்கும். அதற்கு எனக்கு பொறுமை குறைவாக உள்ளது.
ஒரு நாள் ‘நடிப்பின் கஷ்டம் தெரியும்’ என்று தனுஷ் சொன்னார். இப்போது அந்த வார்த்தையின் அர்த்தம் எனக்கு முழுமையாகப் புரிகிறது. நான் ஒருபோதும் நடிப்புப் பாதையில் வருவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை.இயக்குநர் என்கிட்ட பெர்ஃபெக்ஷனை எதிர்பார்க்கும்போது, நான் கொஞ்சம் கடுப்பாக இருப்பேன். பல நடிகர்கள், ‘இப்போ நீ கண் சிமிட்ட கூடாதுனு சொல்வே’ எனச் சொல்லுவார்கள்; ஆனால் அது நடிப்பின் ஒரு பகுதி தான். அதைச் சொன்னாலே நான் வில்லனாகி விடுகிறேன்.
ஒரு இயக்குநராக தனுஷை பார்க்கும்போது, எனக்கு பொறாமையாக இருக்கும். அவர் எப்படி இரவு, பகலாக உழைக்கிறார் என்பதே ஒரு அதிசயம் போல தோன்றுகிறது என்றார். அதுமட்டுமல்ல, “7ஜி ரெயின்போ காலனி 2 மற்றும் மென்டல் மனதில் என்கிற எனது இரண்டு படங்களின் படப்பிடிப்பு தற்போது 60 சதவீதம் முடிந்துவிட்டது. அடுத்த ஆண்டு இந்த இரண்டு படங்களையும் வெளியிடுவோம். ஆனால் அவை குறித்து தற்போது நான் எதையும் வெளிப்படுத்த மாட்டேன்,” என்று செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

