தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனியின் ‘கொலை’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி. அதன் பிறகு, கடந்த வருடம் பல திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். அவை “சிங்கப்பூர் சலூன், தி கோட், லக்கி பாஸ்கர், மட்கா” ஆகிய படங்களாகும். சமீபத்தில் நடிகர் வெங்கடேஷுடன் இணைந்து நடித்த ‘சங்கராந்திகி வஸ்துன்னம்’ திரைப்படம் மிகவும் சிறந்த வரவேற்பைப் பெற்றது.

அதன் தொடர்ச்சியாக தற்போது மீனாட்சி சவுத்ரி, ‘அனகனக ஓக ராஜு’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் மாரி இயக்குகிறார். இதில் நவீன் பொலிஷெட்டி கதாநாயகனாக நடித்துவருகிறார். மேலும், ‘ஸ்த்ரீ’, ‘மிமீ’ போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த தினேஷ் விஜயின் புதிய பாலிவுட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மீனாட்சி சவுத்ரி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் தமிழ், தெலுங்கு உலகத்தைத் தாண்டி, பாலிவுட் சினிமாவில் தனது பயணத்தை தொடக்கவிருப்பது அவரது ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த அவரிடம், “உங்களுக்கு பிடித்த ஐபிஎல் அணி எது?” என்று கேட்டபோது, அவர் பதிலளிக்கும்போது, “ஐபிஎல் போட்டிகளில் ஒரு குறிப்பிட்ட அணியை மட்டுமே பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், தோனி எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எந்த அணியில் விளையாடினாலும், அந்த அணியே எனக்குப் பிடிக்கும். தோனியை விரும்பத் துவங்கியதிலிருந்தே கிரிக்கெட்டைப் பார்க்கத் துவங்கினேன்” என்று தெரிவித்துள்ளார்.