2013ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கிய ‘மதயானைக் கூட்டம்’ வெற்றிப் பெற்ற படம். பின்னர், அவருக்கு புதிய பட வாய்ப்புகள் வராமல் போகவே, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 2023ஆம் ஆண்டு ‘ராவணன் கோட்டம்’ என்ற படத்தை இயக்கினார். எனினும், இப்படம் போதுமான வரவேற்பைப் பெறவில்லை.
இதன் பின்னர், விக்ரம் சுகுமாரன் தனது பேஸ்புக் பக்கத்தில் பரபரப்பான குற்றச்சாட்டை வெளியிட்டார். அதில், “மதயானைக் கூட்டம் படத்தை இயக்கிய பிறகு எனக்கு வேறு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. யாரும் என்னை அழைக்கவில்லை என்று நினைத்தேன். ஆனால் இன்றுதான் எனக்கு தெரிந்தது, எனக்கு கிடைத்த வாய்ப்புகளை யாரோ ஒருவர் தடுத்துள்ளார். அவன் வேறு யாரும் இல்லை; அவனை நானே நடிகனாக்கினேன். அவன் ஒரு துரோகி… என் எதிரிக்கு நண்பனாக செயல்பட்டுள்ளான். இதை அறிந்த நாளிலிருந்து, கடவுள்மீது ஆத்திரம் கொண்டிருக்கிறேன்; ஆனால் ஆத்திரமென்று ஒன்றும் செய்ய முடியாது” என தெரிவித்துள்ளார்.
விக்ரம் சுகுமாரனின் முகநூல் இந்த பதிவால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர் குறிப்பிட்ட நடிகர் யார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் சொல்லாமல், அவர் அந்த பதிவை நீக்கிவிட்டார். ஆனாலும், அந்த நடிகர் யார் என்பது குறித்து நெட்டிசன்கள் தொடர்ந்து விவாதம் நடத்தி வருகின்றனர்.