விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள அவரது 51-வது திரைப்படம் ‘ஏஸ்’. இந்த படத்தில் விஜய் சேதுபதி பல்வேறு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதியுடன் ஒவ்வொரு காட்சியிலும் அவரது நண்பனாக பயணிக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார்.

இந்த படத்தில் நடிகை ருக்மிணி, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும், இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு நடித்துள்ள ‘ஏஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘ஏஸ்’ திரைப்படம் வரும் மே 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், ‘ஏஸ்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகை ருக்மிணி வசந்த் பேசும்போது, ‘ஏஸ்’ எனது முதல் தமிழ் திரைப்படம் இது என்பதால், எனக்கு மிகவும் சிறப்பான ஒரு அனுபவமாக அமைந்துள்ளது. அனைவருக்கும் முதல் படம் என்றால் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் இருக்கும். இந்த படத்தில் விஜய் சேதுபதி சார் உடன் நடித்தது எனக்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பு. அவரையும் அவரது சிறப்பையும் நிறைய தெரிந்துகொண்டேன். ‘ஏஸ்’ என்பது ஒரு நகைச்சுவை கலந்த குடும்ப படம். அனைவருக்கும் இது பிடித்துப் போகும் என நம்புகிறேன். இதற்கு முன்னால் நான் மிகவும் கடுமையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால், இந்த படத்தில் முதன்முறையாக நகைச்சுவைச் சிறகு கொண்ட கதையில் நடித்திருக்கிறேன். என் முதல் தமிழ் படமாதலால், தமிழில் டயலாக் பேசுவது எனக்கு சிரமமாக இருந்தது. ஆனாலும், அந்த சிரமங்களை அனைவரும் பொறுமையாக எடுத்துக்கொண்டு எனக்கு உதவியதற்கு, இந்த படக்குழுவில் இருந்த ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது நெகிழ்ச்சியை தெரிவித்தார்.